Pages

Sunday, July 24, 2011

வியாபாரத்தினால் விபரிதமான கல்வி

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்' "வெள்ளையனே வெளியேறு' போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.

இத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் தட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

ஏன் இந்த நிலை? இதற்கு யார் காரணம்? அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்காது என்று எண்ணி மெட்ரிக் பள்ளியிலும், சிபிஎஸ்இ பள்ளியிலும் படிக்க வைக்கின்றனர். தங்கள் மீதே இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் கல்வித் துறையையும், அரசு ஆசிரியர்களையும் மக்கள் எப்படி நம்புவார்கள்?

தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் தனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பெயரிலோ பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்? கிராமங்களில் உள்ள பள்ளிகளில், சில ஆசிரியர்களை தவிர, காலையில் வந்து பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு தங்களது சொந்தத் தொழிலைக் கவனிக்க எத்தனை ஆசிரியர்கள் செல்கின்றனர்? இதை எல்லாம் விசாரணை செய்து பார்த்தால் அதிர்ச்சித் தகவல்தான் மிஞ்சும்.

அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?

ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா?

சரி, தரமான கல்வி இல்லை என்று கூறினால், அதற்கு ஆசிரியர்கள்தானே காரணம். மேலும், இன்றைய தொழில்நுட்ப உலகில் அடிப்படைத் தேவையான கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். இதைக் கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும், இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்தது மட்டும் இல்லாமல், தனது குழந்தைக்கு மதிய சத்துணவும், அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார். இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால், இந்தக் குழந்தையை பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியுமா?

ஏனென்றால், ஆட்சியரின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த மறுநாள் முதலே பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மதிய உணவுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். சத்துணவில் காய்கறிகளை அதிகப்படுத்துதல், சத்துணவு சமைக்கும் சமையல் ஆள்களை கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று பல கோணங்களில் அரசு கல்வித் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், மேலே குறிப்பிட்ட அனைத்தும் அப்பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் கிடைக்கிறது. ஆகையால் ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவரைப்போன்று அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். விழிப்புணர்வு பேரணியோ அல்லது துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிலையோ ஏற்படாது.

இதற்கு அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். இச்சட்டத்தைக் கொண்டுவந்தால் கல்வித் துறையில் ஏற்படும் பல பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.

சமச்சீர் கல்வி புத்தகம் உடனடியாக அளிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்ற கூறிய பிறகும் அரசு அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பின்னால் எத்தனை முதலைகள் எவ்வளவு பணம் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.  என்பதை அனைவரும் அறிந்ததே. அத்தனையும் இந்த பாவப்பட்ட பள்ளி மாணவர்களிடம் வசூல் செய்து விடாலம் என்று அவர்களுக்குதான தெரியாது.

அரசாங்கமே அரசு பள்ளிகளை இழுத்து மூடிவருவதும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது.
 
அமைச்சர், எம்எல்ஏ, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைவரது குழந்தைகளும் ஒன்றிணைந்து கைகோத்து அரசுப் பள்ளிக்குச் சென்றால்தான் சமத்துவம் பிறக்கும், தரமான கல்வி கிடைக்கும், நாடு செழிக்கும், புதுமை பிறக்கும்.

14 comments:

கூடல் பாலா said...

பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...

கவி அழகன் said...

பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...

முற்றிலும் உண்மை

Unknown said...

koodal bala said...
பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய அரசு மதுக் கடைகளை நடத்துகிறது ....மதுக்கடைகளை நடத்தவேண்டிய பலர் பள்ளிக்கூடங்களை நடத்துகிறார்கள் ...
@@@
WELL SAID BRO

Unknown said...

GOOD POST...
VOTED IN ALL

மாலதி said...

//ஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.//
முற்றிலும் உண்மை

மாய உலகம் said...

//ஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா?//

முற்றிலும் வசதியில்லாதோர் மட்டுமே... அரசு பள்ளிகளை நாடுகின்றனர்..... தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து அம்சங்களையும் அரசு பள்ளிகளில் கொண்டு வரமுடியாதா என்ன .... அரசுக்கு மக்கள் மேல் மனதார அக்கரை வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்... ஏன் ஆசிரியர்களுக்கும் கடனே எனக்கருதாமல் பணியை நேசித்தால் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை மிஞ்சும்.... ஆனால் இதெல்லாம் நடக்குமா............ ??? வரவேற்க்கப்படவேண்டிய அவசிய பதிவு ...நன்றி நண்பரே..... வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.//

வரவேற்க்கப்படவேண்டிய அவசிய பதிவு ... வாழ்த்துக்கள்

M.R said...

அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?

நியாயமான கேள்வி

Anonymous said...

பதிவு தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது.

ஆனந்த குமாரின் குழந்தை ஏன் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுகிறது ? ஏன் பள்ளியில் இலவசச் சீருடை கேட்கிறது ? என்பது கேட்கப்படவேண்டிய கேள்விகள்.

பள்ளியில் மதிய உணவு ஏழை மாணவருக்கே. இலவசச்சீருடையும் அஃதே. ஆட்சித்தலைவரின் குழந்தை ஏழையன்று.

பிற குழந்தைகள் போலவே தன் குழந்தையும் இருக்கவேண்டும் பள்ளியில் என்று ஆனந்த குமார் விரும்பினால், தன் குழந்தைக்கு பிற குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவுக்கு ஈடான உணவை தன்வீட்டில் செய்து கொடுத்தனுப்பி, பிற குழந்தைகள் இலவச மதிய உணவைச் சாப்பிடும்போது அவர்களிடம் சேர்ந்து அமர்ந்து இவர் குழந்தையும் சாப்பிடுவதே முறையாகும். மாறாக, ஒரு ஏழைக்குழந்தைக்குச் சேரவேண்டிய உணவை இவர் குழந்தை சாப்பிடுவது முறையா ? இதே போலவே சீருடை விவகாரமும். ஆனந்த குமார் சிந்திக்க வேண்டும்.

இவர் குழந்தை படிக்கும் அரசுப்பள்ளி இவர் மாவட்டத்தலைநகரத்தில் உள்ளபள்ளி. இல்லையா ? இவர் மாவட்டத்தில் இது மட்டுமா அரசுப்பள்ளி? அவை எத்தனை ? ஆங்கு, இவரின் அதிகாரிகள் விழ்ந்தடித்துக்கொண்டு சீர்திருத்தம் ஒழுங்கு என்று செய்வார்களா ? இவர் பிள்ளை படிப்பதனால் மட்டுமே செய்கிறார்கள்!

ஆக, ஒருவரின் குழந்தைக்காக மாற்றங்கள். இவர் ஓரிரு ஆண்டுகளில் மாற்றலாகி விடுவார். வேதாளம் அப்பள்ளியில் முருங்கை மரமேறிவிடும். ஆண்டு, கிராமத்துக்காக்கை அமர்ந்து பார்க்கும் பரிதாபம் நடைபெறும் இல்லையா ?

Anonymous said...

இனி கிராமத்துக்கு காக்கையின் தலையாய கருத்துக்கு வருவோம்.

;அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்படவேண்டும். அப்படி அவர்கள் பிள்ளைகள் ஆங்கு படிக்கும்போது, அரசுப்பள்ளிகளை நன்றாக நடாத்தவேண்டும் என அவர்கள் தூண்டுவார்கள்" என்பதே.

ஓரளவுக்கு சரி.

மற்றபடி?

கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள் உள்ளன. ஆங்கே அரசுப்பணியாளர் கிடையாது. பஞ்சாயத்து அதிகார்கள் இருக்கலாம். அவர்கள் ஒரு சிலரே. நிறைய கிராமங்களில் தனியார் பள்ளிகள் உண்டு. ஆனால் அவை ஒன்றும் உயர்தர கல்வியை வழங்கவில்லை. அப்படியே ஒரு சில அரசுப்பணியாளர் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் தாங்கள் பிள்ளைகளைச்சேர்த்தாலும், அந்த அரசு ஊழியரால் எந்த மாற்றத்தையும் செய்யவியலா. அரசு ஊழியர்கள் பெரும்பாலோர் கடைனிலை; இடைனிலை ஊழியரே. ஆனந்தக்குமார்கள் அல்ல.

பட்டணத்து அரசுப்பள்ளிகளுக்கு வரும்போது, கிராமத்து காக்கை நினைப்பதைப்போல அவைகள் அரசு ஊழியரால் ஒதுக்கப்படவில்லை. அப்பள்ளிகளில் நிறைய சிறந்தவை. ஆங்கு இடம் கிடைப்பது கடினம். எ.கா. அசோக் நகர் மகளிர் மேனிலைப்பள்ளி, எக்மோர் மானில மேனிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி வெல்லிங்டன் சீமாட்டி மேனிலைப்பள்ளி எனவுண்டு.

சிறுநகரங்கள், சிற்றூர்கள், கிராமங்கள் - இங்குள்ள அரசுப்பள்ளிகளே தரங்கெட்டு உள்ளன. காரணம். அவைகளில் ஊழியம் செய்வோர் கவனிக்கப்படுவதில்லை. எனவே அவர்கள் கற்பித்தலை ஒரு பகுதி நேர ஊழியமாக அரைமனதோடு செய்து எக்ஸ்டரா காசு பார்க்கிறார்கள்.

erodethangadurai said...

அவசியமான பதிவு .... வரிகள் அருமை வாழ்த்துக்கள் ...!

மாய உலகம் said...

//அரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்?//

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்லடி கண்ணேங்குற பழமொழிதான் வேறென்ன.... அருமை

கிராமத்து காக்கை said...

simmakkal நண்பரே
மாவட்ட ஆட்சித்தலைவரின் குழந்தை மதிய உணவு
சாப்பிடுவதால் மற்ற ஒரு ஏழைக்குழந்தையின் உணவு பறிக்கபடுவது என்பது தவறான வாதம் மற்ற குழந்தைகளுக்கும் நிச்சயம் தரமான உணவு கிடைக்க வாய்ப்புகளே ஏராளம் அரசு ஊழியர்கள் ஆட்சியர் குழந்தையும் உணவு உண்பதால் கூடுதல் அக்கரையுடன் வேலைசெய்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை

மகேந்திரன் said...

அரசு வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை
அரசுப் பள்ளியில் தான் படிக்கவைக்கவேண்டும் என்ற
ஒரு நிபந்தனை வர வேண்டும்........
தங்கள் குழந்தைகள் படிப்பிர்காகவாவது
நல்லமுறையில் பள்ளி நடக்குமல்லவா.......

இன்று வியாபாரமாகிவிட்ட கல்விக்கு
விடுதலை கொடுப்பது யார்???

Post a Comment