Pages

Friday, July 1, 2011

35 இலட்சத்துக்கு மேல் விலை போகும் M.B.B.S. மருத்துவ சீட்டு


மிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடம் ஒன்றுக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நன்கொடை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நன்கொடை கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்றாலும் அனைத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் தங்களது நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நன்கொடை முறையில் இந்த ஆண்டும் முன்பதிவு செய்து விட்டன. இந்த ஆண்டு அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,310. இவற்றில் அரசு ஒதுக்கீட்டுக்கு 767 இடங்கள் போக, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 543 இடங்கள் உள்ளன. 

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.2.5 லட்சத்தை கல்விக் கட்டணமாக தமிழக அரசின் நீதிபதிக் குழு நிர்ணயம் செய்தாலும்கூட, இதர கட்டணங்களையும் சேர்த்து ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் நிர்ணயம் செய்கின்றன. நடப்புக் கல்வி ஆண்டுக்கு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு உரிய கல்விக் கட்டணத்தை நீதிபதி குழு விரைவில் அறிவிக்க உள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தங்களது 543 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை பெற்று மாணவர்களைச் சேர்க்கின்றன. 

தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு ரூ.35 லட்சம் வரை கேட்பதாக பெற்றோர் தெரிவித்தனர். ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடத்தப்படும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.45 லட்சம் கோருவதாகக் கூறப்படுகிறது.கோடிகளைச் செலவழித்து... நன்கொடை குறித்து சில சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளைப் பூர்த்தி செய்ய பல கோடிகளைச் செலவழித்து சுய நிதியில் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் நன்கொடை பெறும் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தைக்கூட அரசு ஒதுக்கீட்டுக்கு அளிப்பதில்லை. 

இவை மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுவதால், தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தி அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களையும் நன்கொடை மூலம் நிரப்பிக் கொள்கின்றன. இவற்றை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.மாறாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் ஆணைப்படி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் 65 சதவீதம் (சிறுபான்மை அந்தஸ்து அல்லாதவை.) அல்லது 50 சதவீத (சிறுபான்மை அந்தஸ்து கொண்டவை.) எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கின்றன.மேலும் ரூ.2.5 லட்சம் கல்விக் கட்டணத்துக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களைத் தர வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இதனால் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கஷ்டம் ஏற்படுகிறது. அரசு ஒதுக்கீடு-நிர்வாக ஒதுக்கீடு என அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் கல்லூரிக்கு ஏற்ப தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தால் ஏற்கலாம், என்று அவர்கள் தெரிவித்தனர். புகார் கொடுத்தால் நடவடிக்கை: ""சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பது குறித்து உரிய ஆதாரங்களுடன் பெற்றோர் புகார் கொடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய். சேவையா, வியாபாரமா? பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து போதிய கட்-ஆஃப் மதிப்பெண் இல்லாவிட்டாலும் லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களிடமிருந்து எதிர்காலத்தில் மருத்துவ சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும்? மருத்துவக் கல்வி வியாபாரமாக மாறிவிட்டது, என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்

2 comments:

கூடல் பாலா said...

இந்த நிலை மாற வேண்டும்

கோவை நேரம் said...

அம்மாடி ...இம்புட்டு தொகையா..? பணம் கட்டி படிக்கிறவன் எப்படி ஏழைக்கு வைத்தியம் பார்ப்பான்..?

Post a Comment